சின்னாளபட்டியில் பயன்பாடின்றி புதர்மண்டி கிடக்கும் மகளிர் கழிப்பறை-விஷஜந்துகள் நடமாட்டத்தால் பெண்கள் அச்சம்

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் புதர்மண்டிக் கிடக்கும் கழிப்பறை பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் நடமாடுவதால், இயற்கை உபாதைகளை கழிக்க வரும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.சின்னாளபட்டியில் உள்ள 13வது வார்டு வள்ளுவர் நகரில் உள்ள வள்ளுவர் தெருவில் பொதுமக்கள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

இந்த தெருவில்திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் திட்டம் மூலம், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.13 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இக்கட்டிடம் தற்போது முறையான பயன்பாடின்றி புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் வருகின்றன. இவைகளுக்கு பயந்து, இரவு நேரங்களில் பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், சுகாதாரக்கேட்டு ஏற்படுகிறது. மேலும், சுகாதார வளாகம் அருகே உள்ள திருவேங்கமுடையான் கோயிலைச் சுற்றி குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து தீ வைத்து எரிப்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் செய்கின்றனர். அதிகாலை நேரங்களில் துர்நாற்றம் வீசுவதாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் செய்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து, சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

14வது வார்டில் மலைபோல குப்பை:சின்னாளபட்டி 14வது வார்டு கே.எம்.எஸ்.தெரு, கமலா நேரு நெசவாளர் கூட்டுறவு சங்கம் அருகே, அனைத்து பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் செல்லும் வாறுகால் உள்ளது. இதன் அருகே காலியிடத்தில் மலைபோல குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். காற்று காலங்களில் குப்பைக் கழிவுகள் பறந்து கழிவுநீர் வாறுகாலில் விழுகிறது. இதனால், கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

குப்பை கழிவுகளை தின்பதற்காக வரும் நாய்கள், கழிவுகளை கிளறுவதால் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால், கூட்டுறவு சங்கத்திற்கு வரும் நெசவாளர்கள் தொற்று நோய்க்கு ஆளாகும் அவல நிலையில் உள்ளனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து, கமலாநேரு நெசவாளர் கூட்டுறவு சங்கம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: