திருப்புத்தூரில் குழாய் உடைந்து வீணாகும் காவிரிநீர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருப்புத்தூர்: திருப்புத்தூர்-புதுக்கோட்டை சாலையில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதை  சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த திமுக ஆட்சியின் போது திருச்சி, ராமநாதபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் சுமார் ரூ.615 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டது. திருச்சி  முத்தரசநல்லூரில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது. இதில் திருப்புத்தூர் வழியாக வரும் காவிரி குடிநீர் ராமநாதபுரம் வரை  செல்கிறது. திருப்புத்தூர் பேரூராட்சி நகர் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம்  செய்யப்பட்டு வருகிறது.

புதுப்பட்டியில் வரும் குழாயில் திருப்புத்தூர்-புதுக்கோட்டை சாலையில் விறகு எடை போடும் பகுதியின் எதிரே உள்ள ரோட்டின் ஓரத்தில் குழா ய்  உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே குழாய் உடைப்பை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருப்புத்தூரில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் காவிரி குடிநீர் மட்டுமே இப்பகுதி மக்களின்  தேவையை ஓரளவிற்கு பூர்த்திசெய்து வருகிறது. இதில் பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் ரோட்டில்  வீணாக செல்கிறது. திருப்புத்தூர்-புதுக்கோட்டை சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால்  ரோடும் பள்ளமாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த பள்ளத்தில் டூவீலர்களில் வருபவர்கள் விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: