விருதுநகரில் தீ வைக்கும் சமூக விரோதிகள் தீக்கிரையாகும் சாலையோர மரங்கள்: திணறும் தீயணைப்புத்துறையினர்

விருதுநகர்: மாவட்டத்தில் சாலையோரங்களில் பரவி கிடக்கும் சருகுகளுக்கு சமூக விரோதிகள் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் சாலையோர  மரங்கள் தீக்கிரையாவதை தடுக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.மாவட்டத்தில் சாலையோர தரிசு நிலங்கள் முதல் அனைத்து இடங்களிலும் புற்கள் கொளுத்தும் வெயிலில் சருகாகி கிடக்கின்றன. காய்ந்து கிடக்கும்  சருகுகளுக்கு சமூக விரோதிகள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டாக தீ வைத்து விடுகின்றனர். சருகுகளுக்கு வைக்கப்படும் கொளுத்தும் வெயிலுக்கு  தீயில் சாலையோரங்களில் இருக்கும் மரங்கள், தரிசு நிலங்களில் இருக்கும் மரங்களும் கருகி வருகின்றன. கடந்த ஒரு மாதமாக சருகளால் கருகும் மரங்களை காப்பாற்ற முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த தொடர்  மழையால் தீ வைப்பு சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக வாட்டி வதைத்த வெயிலில் மீண்டும் தீ வைப்பு சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன.

நேற்று பாலவநத்தத்திலிருந்து மெட்டுக்குண்டு செல்லும் சாலையில் சருகுகளுக்கு வைத்த தீயில் சாலையோரங்களில்  இருந்த பல பனைமரங்கள் எரிந்து கருகி சாம்பலானது. மேலும் சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்களில் தீப்பற்றினால் பெரிய அளவில் விபத்து  ஏற்படும். ஆனால் எந்தவித அக்கறையும் இல்லாத சமூக விரோதிகள் சிறு தீக்குச்சியை பற்ற வைத்து விட்டு பறந்து விடுகின்றனர்.மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக புகார் வந்து  சென்று அணைத்துள்ளோம். கடந்த சில நாட்களாக தீ வைப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. சருகுகளுக்கு தீ வைப்போர் மீது மக்கள்  போலீசில் புகார் அளிக்க முன்வர வேண்டும். போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சமூக விரோத செயல்கள் தடைபடும், என்றார்.

Related Stories: