பொருள் விலையில் 60 சதவீதம் போவதாக வேதனை இரவு ஊரடங்கில் போலீசார் சரக்கு வாகனங்களிடம் மாமூல்: லாரி உரிமையாளர் சம்மேளனம் புகார்

சேலம்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு வாகனங்களை போலீசார் மறித்து மாமூல் வசூலிப்பதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறியதாவது: இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் சரக்கு வாகனங்களை இயக்க எந்த தடையும் இல்லை என்று கூறி, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள், மருத்துவ பொருட்கள், பால், குடிநீர் மற்றும் அத்தியாவசிய சரக்குகள் ஏற்றி வரும் லாரிகளை சில பகுதிகளில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்த விளைபொருட்களை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இதையும் பல இடங்களில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி  குறைந்தது ரூ.200 முதல் ரூ.500 வரை மாமூல் வசூலிக்கின்றனர். இதனால் அவர்களது பொருளுக்கான விலையில் 60 சதவீதத்தை இவர்களிடமே கொடுத்து விட்டுச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலர் விளை பொருட்களை பறிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு கொடுக்க மறுத்தால் வண்டிகளை வேண்டுமென்றே நிறுத்தி வைத்து தாமதப்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரசு, இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கிறதா? இல்லையா?  என்பதை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு முருகன் வெங்கடாசலம் கூறினார்.

Related Stories: