குமரி முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்: விடிய, விடிய போலீஸ் தீவிர கண்காணிப்பு; சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்

நாகர்கோவில்: இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று இரவு முதல் விடிய, விடிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (20ம்தேதி) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இரவு 9 மணிக்கு பின் கடைகள் அடைக்கப்பட வேண்டும்.  இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.

குமரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கையொட்டி கண்காணிக்கும் வகையில் எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 800 போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டன. வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் நேற்று காலை 5 மணியில் இருந்து காலை 8 மணி வரை இயக்கப்பட்டன. உள்ளூர் பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.  இரவு 8 மணிக்கு பிறகு பஸ்கள் இல்லாததால், பஸ் நிலையங்களில் பயணிகள் தவித்தனர். வெளியூர்களில் இருந்து நாகர்கோவில் வந்திருந்த பலர், தங்களது சொந்த ஊருக்கு செல்ல நேற்று இரவு வடசேரி பஸ் நிலையம் வந்தனர்.

ஆனால் இரவு 8 மணிக்கு பின் வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இல்லாததால் அவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். டவுன் பஸ்களும் இரவு 8.30க்கு பின் புறப்பட வில்லை. இதனால் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையமும் வெறிச்சோடி கிடந்தது. பஸ் நிலையங்களில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. வழக்கமாக இரவு 11 மணி, 12 மணி வரை இயங்கும் ஓட்டல்களும் மூடப்பட்டன. இரவு 10 மணி முதல் போலீசார் ரோந்து பணியை தொடங்கினர். முக்கிய வீதிகளில் பேரிகார்டு அமைத்து கண்காணித்தனர். இரவு நேரங்களில் பைக், கார்களில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

முதல் நாள் என்பதால் வழக்கு பதிவு எதுவும் செய்யாமல் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் இரவு நேரங்களில் பைக் ரேஸ் நடைபெறுவது வழக்கம். நேற்று ஊரடங்கையொட்டி யாராவது வருகிறார்களா? என்பதை போலீசார் கண்காணித்தனர். சோதனை சாவடிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு, குமரி மாவட்டத்துக்குள் நுழைந்த வாகனங்களை சோதனை செய்தனர். சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

அதிகாலை 5 மணியில் இருந்து பஸ்கள் இயங்கின

ஊரடங்கு அதிகாலை 4 மணிக்கு நிறைவு பெற்றதை தொடர்ந்து, பஸ் டெப்போக்களில் இருந்து 4 மணிக்கு பிறகு பஸ்கள் புறப்பட்டு பஸ் நிலையங்களுக்கு வந்தன. சென்னை, கோவை செல்ல வேண்டி விரைவு பஸ்களும் வந்தன. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரைக்கு முதலில் பஸ்கள் புறப்பட்டன. பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள், மகிழ்ச்சியுடன் பயணித்தனர். கிராம புறங்களுக்கு செல்ல வேண்டிய டவுன் பஸ்களும் காலை 5 மணி அளவில் மீனாட்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.

Related Stories: