மயிலாடுதுறை அருகே மயானத்தை சீரமைத்துத்தரகோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருக்குளம்பியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (63) என்பவர்18ம் தேதி இறந்தார். அவரது உடலை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பரம்பரையாக இருந்து வரும் மயானத்தில் எரிக்க முடிவெடுத்து மயானப்பாதையை இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்தனர்.

அப்போது மயானத்தை ஒட்டி உள்ள மாதாகோயில் தெருவை சேர்ந்தவர்கள் இந்த மயானத்தில் உடலை புதைக்கவோ எரிக்கவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஆடுதுறை-எஸ்.புதூர் சாலையில் அமர்ந்து நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம் தாசில்தார் இளங்கோவன் ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த முறை நாகராஜ் உடலை அடக்கம் செய்ய ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சுடுகாட்டை இடமாற்றம் செய்ய மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் நாகராஜன் உறவினர்கள் மற்றும் விநாயகர்கோயில் பகுதி மக்கள் 50க்கும்மேற்பட்டோர் கடைவீதியில் நின்று கொண்டு மயானப்பாதையை இடம் மாற்றக்கூடாது. மயானத்தை நவீனப்படுத்தவேண்டும், பாதையை சரிசெய்யவேண்டும், தண்ணீர் வசதி செய்துதரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.ஒருவாரகாலத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: