ஊழல் அதிகாரிகள் மீது 3 மாதத்தில் நடவடிக்கை: மத்திய அரசு துறைகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, ஊழல் பிரச்னைக்கு தீர்வு காண, எந்தவொரு அதிகார இடையூறும் இல்லாத அமைப்பாக 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  அரசு துறை அதிகாரிகள் மீது பதிவு செய்யப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் நீண்ட நாட்களாக அப்படியே கிடப்பில் போடப்படுகிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுவது இல்லை.

ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் குழப்பம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மீது ஊழல் நடவடிக்கையோ அல்லது நிர்வாக ரீதியிலான நடவடிக்கையோ எடுக்க முடிவதில்லை. இதனால், ஊழல் அதிகாரிகள் பணி ஓய்வு பெறும் போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நற்சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை பெறப்பட்ட ஊழல் புகார்கள் மீது சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி வரும் மே 31, 2021க்குள், குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>