ஈரோட்டில் கொட்டி தீர்த்த கோடை மழை

ஈரோடு: ஈரோட்டில் நள்ளிரவு முதல்  அதிகாலை வரை கொட்டி தீர்த்த கோடை மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர்  பெருக்கெடுத்து ஓடியது. ஈரோட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் 105  டிகிரிக்கு மேலாக சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பகல்  நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். இதில், நேற்று  காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட  அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்கும்  வகையில் நள்ளிரவு 1 மணியளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. இன்று அதிகாலை வரை கொட்டி தீர்த்தது.  

இதனால், ஈரோடு மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் கழிவு நீர் ஓடைகளில்  நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக கோடை  வெயிலின் உஷ்ணம் ஓரளவுக்கு தணிந்தது. இதேபோல், மாவட்டத்தின் சுற்றுப்புற  பகுதிகளிலும் பரவலான மழை பெய்ததால், வெயிலின் உஷ்ணம் ஓரளவுக்கு தணிந்து  இன்று குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை  7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு; ஈரோடு 45,  பெருந்துறை 8, தாளவாடி 10, சத்தி 15, பவானிசாகர் 11, பவானி 15,  நம்பியூர் 23, சென்னிமலை 9, எலந்தகுட்டை மேடு 1.6, கொடிவேரி 15.4,  குண்டேரிப்பள்ளம் 24.6, வரட்டுப்பள்ளம் 6 என மாவட்டத்தில் மொத்தம்  183.6 மி.மீட்டர் மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர்:கடந்த 5 மாதங்களாக திருப்பூர் பகுதியில் மழையின் அளவு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. நேற்று மாலை வாகனம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றதால் இன்று காலை வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

Related Stories: