தலைவர்கள் பெயரில் இருந்த சாலைகளின் பெயர் மாற்றம்: யார் பார்த்த வேலை இது...?: இதுவரை விடை கிடைக்காத புதிர்: வாய் திறக்காத அதிகாரிகள்

சென்னை: தமிழகத்தில் காபந்து அரசு இருக்கும் நேரத்தில், தலைவர்கள் பெயரில் இருந்த சாலைகளை பெயர் மாற்றம் செய்தது யார் பார்த்த வேலை  என்று கேள்விக்கு இது வரை விடிவு கிடைக்காத புதிராக இருந்து வருகிறது. முதல்வர், தலைமை ெசயலாளர் மற்றும் அதிகாரிகள் வாய் திறக்காதது  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் சில முக்கியச் சாலைகள், நெடுஞ்சாலைகளுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்களின்  பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. பெரிய தலைவர்களையும், அவர்களது பங்களிப்பையும் வருங்கால சந்ததியினர் நினைவு கூறுவதற்காக ஆட்சி செய்த  அரசுகள் எடுத்த கொள்கை முடிவாக இது இருந்து வந்தது.

1969ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பின்னர்,  ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் சென்னை மாநகரத்தின்   பிரதான சாலையாக இருந்த மவுண்ட் ரோடுக்கு ‘அண்ணா சாலை’ என்று பெயர்  சூட்டினார். பரங்கிமலையை வைத்துத் தான் மவுண்ட் என்கிற பெயரை  வைத்து  மவுண்ட் ரோடு என்றும் பெயர் இருந்தது. அதனால் சின்னமலையில் இருந்து பரங்கிமலை வரை  மவுண்ட் ரோடு என்றும்,  சின்னமலையிலிருந்து முத்துசாமி பாலம் வரை ‘அண்ணா  சாலை’ என்றும் கருணாநிதி பெயர் வைத்தார்.

அதே போல் 1975ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்கு பிறகு, அதுவரையில் கடற்கரை சாலை என்று அழைக்கப்பட்டு வந்த அந்த   சாலைக்கு காமராஜர் சாலை என்று கருணாநிதி பெயர் சூட்டினார். மேலும் 1979ம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டை  ஒட்டி  அப்போதைய  முதல்வர் எம்ஜிஆர், பூந்தமல்லி நெடுஞ்சாலையை பெரியார் ஈ.வெ.ரா  சாலை என்று பெயர் மாற்றினார். தலைவர்களின் பெயரில் இருந்த சாலைகள்  மக்களுக்கு எளிதாக புரியும் வகையிலும், தலைவர்கள் குறித்து அறியும் வகையிலும் காலம் காலமாக இருந்து வந்தது. எந்த மாவட்டத்தில் இருந்து  சென்னைக்கு வந்தாலும் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பெரியார் சாலை என்பது உச்சரிக்காமல் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு இந்த  சாலைகள் புகழ் பெற்று இருந்து வந்தது. அவ்வளவு சிறப்பு மிக்க சாலைகள் போக்குவரத்துக்கு மிகவும் புகழ் பெற்றதாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் வரை அமைதியாக இருந்தவர்கள் ‘திடீரென’ சிறப்பு மிக்க பெரியார் ஈ.வெ.ரா  சாலை பெயரை மாற்றினர். அதாவது ‘கிராண்ட்  வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்று மாற்றப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்ட போர்டுகள் பெரியார் ஈவெரா சாலையில் வைக்கப்பட்டது. இந்த திடீர்  அறிவிப்பு தமிழக  மக்களின் விருப்பங்கள் மற்றும் உணர்வுகளையும் அவமதிப்பது போல உள்ளதாக தமிழக மக்கள், அரசியல் கட்சியினர், பெரியார்  ஆர்வலர்கள் என்று கண்டன குரல்கள் எதிரொலிக்க தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது. போராட்டம்  விஸ்வரூபம் எடுத்த நிலையில் ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்ற வாசகம் திடீரென கருப்பு பெயின்டால் அழிக்கப்பட்டது. அதன் பிறகு சில  நாட்கள் கழித்து பெரியார் ஈ.வே.ரா. சாலை என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா சாலையை பெயர் மாற்றம்  செய்தது யார். எதிர்ப்புக்கு பிறகு பெயரில் கருப்பு பெயின்டால் எழுதியது யார் என்ற கேள்விக்கு இதுவரை விடைக்கிடைக்கவில்லை.

சென்னையில் உள்ள சாலகைள் அனைத்தும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. ஆனால், சென்னையில் உள்ள சிறிய சாலைகள்  தான் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், பெரியார் ஈ.வே.ரா. சாலை நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்று  மாநகராட்சி தரப்பில் தட்டிக்கழிக்கப்பட்டது. பெயர் எழுதியதற்கு அவர்கள் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. அப்படி என்றால் நெடுஞ்சாலை  துறையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் நிர்வகித்து வருகிறார். ஆனால், அந்த துறையில் இருந்தோ?, அவரிடம் இருந்தோ இதுவரை எந்த  விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அண்ணாவின் பெயர் சூட்டப்பட்ட  சாலையின் பெயரை அகற்றுவதற்கும், காமராஜர் சாலை பெயரையும்  மாற்றுவதற்கான  முயற்சிகளும் நடந்து வந்தது. இந்த நிகழ்வுகளுக்கு கடும் எதிர்ப்பு கணைகள் எழுந்தது. ஆனால், அது குறித்து யாரும் மறுப்போ,  அரசு தரப்பில் விளக்கமோ அளிக்கவில்லை. தற்போது தமிழகத்தில் காபந்து அரசு தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த முடிவு எடுக்க  வேண்டுமென்றாலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் எடுக்க முடியும். தேர்தல் நடந்து முடியும் வரை அமைதி காத்தவர்கள், தேர்தல் முடிந்த  பின்னர் இது போன்று வேலைகளை செய்ய எங்கிருந்து யோசனை வந்தது? யார் முடிவெடுத்தது? பெயரை மாற்ற உத்தரவு போட்டது யார்?. யாரை   திருப்தி செய்யும் வகையில் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பின்னணி என்ன என்று பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில்  இன்னும்  இருந்து வருகிறது.

மக்கள் கொதித்து எழுந்த நிலையில் பெயர் மீது கருப்பு பெயிண்ட் அடித்தது யார்? அதன் பிறகு பெயின்ட் அடித்த இடத்தில் மீண்டும் ெபரியார்  ஈ.வெ.ரா சாலை என்று யார் ஸ்டிக்கர் ஒட்டியது என்று கேள்விகள் இன்னும் மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அதற்கு  முதல்வரோ, தலைமை செயலாளரோ இதுவரை எந்தவித தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை. இது தற்போது சந்தேகத்தை கிளப்பி வருகிறது.  ஏற்கனவே, தமிழக அரசை மத்திய அரசின் அடிமை அரசு என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

எனவே, மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் இது போன்று பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.  ஏற்கனவே திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூச முயன்ற சம்பவங்களும் அரங்கேறியது. அதன் பிறகு அது முறியடிக்கப்பட்டது. இப்போது தமிழக  தலைவர்களின் பெயர்களை அழிக்க நினைக்கும் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ் கலாசாரத்தையும், தமிழக தலைவர்களையும்  அவமதிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுக்க தொடங்கியுள்ளது.

சாலைகளின் பெயர் மாற்ற விவகாரத்தில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இதுவரை முதல்வரோ, தலைமை செயலாளரோ எந்த விளக்கமும்  அளிக்கவில்லை.

Related Stories: