சென்னை: ஐபிஎல் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் தொடக்க கட்ட லீக் ஆட்டங்கள் சென்னை, மும்பை நகரங்களில் நடைபெற்று வருகின்றன. மும்பையில் முதல் 3 ஆட்டங்களில் விளையாடிய டெல்லி கேப்பிடஸ் அணி தற்போது சென்னை வந்துள்ளது. இங்கு தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பையை எதிர்கொள்கிறது. தனது முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி, அடுத்து ராஜஸ்தானிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பிரித்வி, தவான், ரிஷப், ஸ்டாய்னிஸ், வோக்ஸ், ஆர்.அஷ்வின், ரபாடா, ஆவேஷ் கான் ஆகியோருடன் புதுவரவான ஸ்மித், லலித் யாதவ் நம்பிக்கை அளிக்கின்றனர்.