அரசு இருக்கு... ஆனா இல்லை...மிரட்டும் கொரோனா.. திணறும் அதிகாரிகள்

* மந்தகதியில் மருத்துவமனைகள்

* படுக்கை முதல் தடுப்பூசி வரை பற்றாக்குறை

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், காபந்து அரசு உள்ளதால் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். படுக்கை முதல் தடுப்பூசி வரை பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

 இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி பதிவாகிறது. மரணங்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர், சண்டிகார், குஜராத், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, அரியானா ஆகிய 11 மாநிலங்களில் கொரோனா தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தை கொரோனா பாதிப்பு மிரட்டி வருகிறது.

 தினசரி கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்து வருகிறது. தினசரி மரணங்களின் எண்ணிக்கையும் 30ஐ கடந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் எந்த முடிவுகளும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாகவும், பெயருக்கு கூட்டத்தை மட்டும் நடத்துவதாகவும், எடுத்த முடிவுகளை கூட முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

 ஏப்ரல் தொடக்கம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஏப்ரல் 1ம் ேததி தமிழகத்தில் 2,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகு இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரத்தொடங்கியது. 5ம் தேதி இது 3,672 ஆகவும், 10ம் தேதி 5,989 ஆகவும், 15ம் தேதி 7,987 ஆகவும் உயர்ந்தது. இவ்வாறு தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

நேற்றுமுன்தினம் 17ம் தேதி வரை தமிழகத்தில் 9,80,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 9,02,022 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 13,071 பேர் மரணம் அடைந்துள்ளனர். 65,635 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த 7ம் தேதி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு சென்னையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன்படி, பேருந்துகளில் நின்று செல்ல அனுமதி இல்லை. பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி. உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவைகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். உள்அரங்க நிகழ்ச்சியில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். திருமணங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

9ம் தேதி பிரதமர் மோடி நடத்திய கொரோனா தொற்று ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று கட்டுப்பாடு முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என்று தலைமை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

10ம் தேதி வெளியான அறிக்கையில், வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரை மூடப்படும் என்றும், திரையரங்குகளில் 50சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து கொரோனா தொற்று தடுப்பு பணி தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. 16ம் தேதி அனைத்து துறை அதிகாரிகளுடன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பிறகு இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெயர் அளவுக்கு மட்டும் கூட்டங்கள் நடத்தப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாகவும், தடுப்பூசி முதல் படுக்கை வரை அனைத்திற்கும் தட்டுப்பாடு உள்ள நிலையில், இதற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு துறைகள் அனைத்தும் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும். முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

அரசு பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர். பெரிய கடைகளில் எல்லாம் கொரோனா விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதில்லை. காபந்து அரசு உள்ளதால் அதிகாரிகள்தான் அரசு போல் செயல்பட வேண்டும். ஆனால், அதிகாரிகள் யாரும் கொரோனா பணிகளில் முழுமையாக ஈடுபடுவதில்லை. கடந்த ஆண்டு செயல்பட்டது போல் இந்தாண்டு அரசு அதிகாரிகள் முழுமையாக பணியாற்றவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலை தொடந்தால் தமிழகம் மிகவும் மோசமான நிலையை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மிஸ்ஸிங்

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்றுமுன்தினம் (17ம் தேதி) ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் கலந்து கொண்டார். ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொள்ளவில்லை.

தேர்தல் ஆணைய விதிமுறைகள் காரணமா?

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மைய ஆய்வின் போது, கொரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”களத்தில் பணிபுரிய தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாகத்தான் பத்திரிகை செய்தி, அரசு மருத்துவமனை ஆய்வு உள்ளிட்டவற்றை முழுமையாக செய்ய முடியவில்லை” என்றார். இதேபோன்று அனைத்து அமைச்சர்களும் கொரோனா தொற்று தடுப்பு பணி என்றால் என்ன என்பது போல் உள்ளனர்.

வெளிப்படைத்தன்மை இல்லை

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. ஆனால், இதை சீர் செய்ய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக மாவட்டம் வாரியாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை, கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவலையும் அரசு இதுவரை வெளிப்படையாக வெளியிடவில்லை என சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்குகளை எண்ண கோரிக்கை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து செயல்பட மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் தான் முடியும். மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, களத்தில் இறங்கி பணியாற்றுவது அனைத்தையும் ஒரு அரசால் தான் செய்ய முடியும். எனவே கொரோனா தொற்று அதிகரித்து வரும் தமிழகம், கேரளாவில் வாக்குகள் எண்ணிக்கை முடிவுகளை விரைவில் அறிவிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் புதிய அரசு பதவி ஏற்கும் போது நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

47 லட்சம் பேருக்கு தடுப்பூசி...

தமிழகத்தில்  கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  இதன்படி, 17ம் தேதி வரை 47 லட்சத்து 5 ஆயிரத்து 473 பேருக்கு தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழத்திற்கு மத்திய அரசு 55.85 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அளித்ததாகவும், இதில் 47 லட்சம் டோஸ் தடுப்பூசி  பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 8.8 லட்சம் டோஸ் கையிருப்பு உள்ளதாகவும்  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: