மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் ஹாட்ரிக் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்

சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 38 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் டேன் கிறிஸ்டியனுக்கு பதிலாக ரஜத் பத்திதார் இடம் பெற்றார். கோஹ்லி, படிக்கல் இருவரும் பெங்களூர் இன்னிங்சை தொடங்கினர். கோஹ்லி 5 ரன் எடுத்து வருண் சுழலில் திரிபாதி வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த பத்திதார் 1 ரன் மட்டுமே எடுத்து வருண் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, ஆர்சிபி 2 ஓவரில் 9 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. இந்த நிலையில், படிக்கல்லுடன் இணைந்த மேக்ஸ்வெல் அதிரடியில் இறங்க, பெங்களூர் ஸ்கோர் வேகம் எடுத்தது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தனர். மேக்ஸ்வெல் 28 பந்தில் அரை சதம் விளாசினார். படிக்கல் 25 ரன் (28 பந்து, 2 பவுண்டரி) எடுத்து பிரசித் வேகத்தில் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து மேக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ் வழக்கம்போல பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார்.

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. மேக்ஸ்வெல் 78 ரன் (49 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி, கம்மின்ஸ் வேகத்தில் ஹர்பஜன் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் டி வில்லியர்ஸ் ஆக்ரோஷமாக விளையாட, பெங்களூர் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவர் 27 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. டி வில்லியர்ஸ் 76 ரன் (34 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), கைல் ஜேமிசன் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவரில் மட்டும் பெங்களூர் அணிக்கு 70 ரன் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா பந்துவீச்சில் வருண் 2, கம்மின்ஸ், பிரசித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கேகேஆர் களமிறங்கியது. ராணா, கில் இருவரும் துரத்தலை தொடங்கினர். கில் 21 ரன் (9 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விடைபெற்றார். திரிபாதி 25 ரன், ராணா 18 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கார்த்திக் 2 ரன் மட்டுமே எடுத்து சாஹல் சுழலில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் மார்கன் 29 ரன், ஷாகிப் ஹசன் 26 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, கேகேஆர் தோல்வி உறுதியானது.

கவுரமான ஸ்கோரை எட்டப் போராடிய கம்மின்ஸ் 6 ரன், ரஸ்ஸல் 31 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து நடையை கட்டினர். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன் மட்டுமே எடுத்து, 38 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹர்பஜன், வருண் தலா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் ஜேமிசன் 3, சாஹல், ஹர்ஷல் தலா 2, சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர். ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய ஆர்சிபி 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories:

>