2வது கணவரை கொன்று வீட்டில் புதைப்பு கள்ளக்காதலனுடன் மனைவி அதிரடி கைது

தென்காசி: தென்காசியில் 2வது கணவரை கொன்று வீட்டில் புதைத்து இரண்டரை வருடமாக நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி அபிராமி (33). இவர், இதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். தங்கராஜ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் அபிராமிக்கும் தென்காசி - மதுரை சாலையில் அமைந்துள்ள ஒர்க்‌ஷாப்பில் பணியாற்றிய தென்காசி அருணாசலபுரம் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் காளிராஜ் (23) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதனை காளிராஜின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் காளிராஜிக்கு அபிராமியின் தொடர்பை விட மனமில்லாததால் கடந்த 2017ல் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காளிராஜை காணவில்லை. இதுகுறித்து காளிராஜின் பெற்றோர் தென்காசி ேபாலீசில் புகார் கொடுத்தனர். காளிராஜ் குறித்து கேட்பவர்களிடம் அவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருப்பதாக அபிராமி கூறி வந்துள்ளார். இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.இதனிடையே அபிராமிக்கு குத்துக்கல்வலசை பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வரும் மாரிமுத்து என்பவருடனும் தொடர்பு ஏற்பட்டது. இருவரது கள்ளக்காதல் குறித்து பரவலாக தெரிய வந்ததால், அபிராமியின் செயல்கள் குறித்து தனிப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். மேலும் காளிராஜின் தாயார் உமா, தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் வலியுறுத்தினார்.இதைத்தொடர்ந்து அபிராமி, கள்ளக்காதலன் மாரிமுத்து ஆகியோரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:தங்கராஜ் இறந்தபிறகு அபிராமி, தன்னை விட 10 வயது குறைந்த காளிராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்த போதே அபிராமிக்கு மாரிமுத்து என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த காளிராஜ், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்று எண்ணி கடந்த 2018 செப்டம்பரில் காளிராஜிக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.பின்னர் மாரிமுத்துவை வரவழைத்து இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் காளிராஜை கொலை செய்துள்ளனர். காளிராஜை கொலை செய்த தகவல் அபிராமியின் வீட்டிற்கு பால் ஊற்றி வரும் முருகேசன் என்பவருக்கு தெரிந்துள்ளது. அவரிடம் இருவரும் உடலை மறைக்க உதவி கேட்டனர். ஆனால் முருகேசன் மறுத்துவிட்டு வீட்டிலேயே புதைத்து விடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

அபிராமியும் மாரிமுத்துவும் சேர்ந்து உடலை வீட்டிற்குள் புதைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் இருந்து விட்டனர். காளிராஜ் குறித்து கேட்டவர்களிடம் அவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார் என்று கூறி வந்துள்ளார். அபிராமி - மாரிமுத்து இருவரும் கூறிய தகவலின் அடிப்படையில் தாசில்தார் முன்னிலையில் உடலை புதைத்ததாக கூறிய இடத்தில் தோண்டி பார்க்கப்பட்டது. அப்போது மண்டை ஓடு உள்ளிட்ட உடலின் எலும்பு பகுதிகள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து அபிராமி, கள்ளக்காதலன் மாரிமுத்து, கொலை நடந்தது தெரிந்தும் அதனை போலீசாருக்கு தெரிவிக்காத பால்காரர் முருகேசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>