திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு வாரச்சந்தை ஒருநாள் மட்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்: அனைத்து காய்கறி வியாபாரிகள் கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு வாரச்சந்தை அனைத்து காய்கறி வியாபாரிகள், நேற்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கூட்டேரிப்பட்டு வாரச்சந்தையில் சுமார் 150 காய்கறிகடை மற்றும் மளிகைகடை, கருவாடு வியாபாரக்கடைகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறோம். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக அரசால் அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கத்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை உள்ள சூழலில் அனைத்து வியாபாரிகளும் தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து வழிகாட்டுதலின்படியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதென்று அறிவித்துள்ளோம்.

மேலும், அனைத்து கடைகளிலும் விழிப்புணர்வு பதாகைகளும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்து வருகிறோம். மேலும், வாரச்சந்தை இடமானது சுமார் 10 ஏக்கருக்குமேல் உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தடுப்பு அமைத்து 30 அடி ரோடு இடைவெளி உள்ளது. பொதுமக்களும் சமூக இடைவெளிவிட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரச் சந்தையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடக்கும் வியாபாரத்தை நம்பிதான்அனைத்து வியாபாரிகளின் வாழ்வாதாரமும் உள்ளது. எனவே, இந்த வாரச்சந்தை நடப்பதற்கு அனுமதியளிக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: