காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறி இருந்தால் ரயில்களில் பயணிக்கக் கூடாது: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

சேலம்: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயை  பொருத்தளவில், முக்கிய ஊர்களுக்கு 75 சதவீதத்திற்கும் அதிகமான மெயில், எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், அரசின் வழிகாட்டு  நெறிமுறைகளை பின்பற்றி மிக எச்சரிக்கையாக ரயில்களில் பயணிகள் பயணிக்க ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு: முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை ஒவ்வொரு பயணியும் ரயில்வே ஸ்டேஷன்களில் பின்பற்றிட வேண்டும். தேவையற்ற பயணம் மற்றும் குழுவாக செல்லுதலை தவிர்க்க வேண்டும். டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் பிளாட்பார்ம்களில் சமூக இடைவெளியில் பயணிகள் நிற்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால், ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, அதன் முடிவுக்காக காத்திருப்போரும்,

 தனிமையில் இருப்போரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரும் கட்டாயம் ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும். கை கழுவ சோப்பு, கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், உணவு, நீர் போன்றவற்றை ரயில் பயணத்தின் போது அவரவர்களே  எடுத்துச் செல்ல வேண்டும். ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில்களில் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற எந்த செயலிலும் பயணிகள் ஈடுபடக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்து  கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி, இ-பாஸ், பரிசோதனை, தனிமைபடுத்துதல் போன்றவற்றை பயணிகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: