நாடு முழுவதும் அதிவேகமாக பரவுகிறது கொரோனா வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி: மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: நிபுணர் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, இந்தியாவில் 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இதோடு, வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள மேலும் பல தடுப்பூசிகளுக்கு விரைந்து அனுமதி வழங்க இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. பாதிப்பு மட்டுமின்றி பலி எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த இருக்கக் கூடிய ஒரே வழி அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவது மட்டுமே. இதனால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு விரைவுபடுத்தி உள்ளது. அதே சமயம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் அவசரகால பயன்பாட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. இதில் இந்திய தயாரிப்பான கோவாக்சினுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசின் நிபுணர்குழு நேற்று முன்தினம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஸ்புட்னிக்-விக்கு நேற்று அனுமதி அளித்தது. இந்த தடுப்பூசி ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடங்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்புட்னிக்-விக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள மேலும் பல  கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் விரைவில் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் உள்ள அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் விரைந்து ஒப்புதல் வழங்கப்படும். எனவே, அமெரிக்காவின் பைசர், மாடர்னா போன்ற தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைடஸ் கேடிலா, சீரம் நோவாவாக்ஸ் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி மருந்துக்கு இந்தாண்டுக்குள் அனுமதி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* குஜராத்தில் பாதிப்பு பதற வைக்கும் வீடியோ

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. தலைநகர் அகமதாபாத்தில் மருத்துவமனை வளாகம் முழுவதும் மைல் நீளத்திற்கு கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் அலறிக் கொண்டிருக்கின்றன. பல சுடுகாடுகளிலும் கொரோனாவால் இறந்தவர்களை தகனம் செய்ய இடமில்லாமல், வெட்ட வெளியில் எரிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பதற வைக்கின்றன. மத்திய பிரதேசத்தில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாததால் கீழே படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

* மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று

மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவுமில்லை. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

* மகாராஷ்டிராவில் 15 நாள் 144 தடை

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிராவில் 15 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கும் எண்ணம் இல்லை. ஆனாலும், அடுத்த 15 நாட்களுக்கு ‘மக்கள் ஊரடங்கு’க்கு இணையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது, இன்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வரும். அனைத்து நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்கும். பொது போக்குவரத்து அவசர கால சேவை வாகனங்கள், கொரோனா பணியாளர்களுக்கு மட்டுமே இயக்கப்படும்,’’ என்றார்.

1.61 லட்சம் பேருக்கு தொற்று

* நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மொத்த பாதிப்பு 1 கோடியே 36 லட்சத்து 89,453 ஆக அதிகரித்துள்ளது.

* ஒரே நாளில் 879 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 71,058 ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 லட்சத்து 64,698 ஆக அதிகரித்துள்ளது.

85 கோடி டோஸ் உற்பத்தி செய்ய இலக்கு

* சர்வதேச அளவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதித்த 60வது நாடாக இந்தியா உள்ளது.

* இந்த மருந்தை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகிக்கும் உரிமத்தை பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் செயல்திறன் கொண்டது என கூறப்படுகிறது.

* இந்தியாவில் ஸ்புட்னிக் வி மருந்தை ஓராண்டில் 85 கோடி டோஸ் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: