சட்டீஸ்கரில் 22 வீரர்கள் பலியானதால் ‘ஆபரேஷன் ஆல் அவுட்’ பட்டியலில் 50 நக்சல் தளபதிகள்: என்கவுன்டரில் போட்டுத்தள்ள வியூகம்

புதுடெல்லி: சட்டீஸ்கரில் நக்சல்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் 22 வீரர்கள் பலியானதால், ‘ஆபரேஷன் ஆல் அவுட்’ என்ற வியூகத்தை பாதுகாப்பு படை தயாரித்துள்ளது. அதன்படி 50 நக்சல் தளபதிகளை என்கவுன்டரில் போட்டுத்தள்ள வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் ‘ஆபரேஷன் ஆல் அவுட்’ போலவே, நக்சலைட்டுகளுக்கு எதிராகவும் நடவடிக்கையை எடுக்க மத்திய உள்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன. ‘ஆபரேஷன் ஆல் அவுட்’ பட்டியலில் 50 நக்சல் தளபதிகளின் பெயர் பட்டியலை பாதுகாப்பு அமைப்புகள் தயாரித்துள்ளன. இந்த நக்சல் தளபதிகள் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வனப்பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்களை கண்டறிந்து என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நக்சல் தடுப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘உளவுத்துறை முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஆபரேஷன் ஆல் அவுட் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 10 மிகவும் ஆபத்தான பெண் நக்சல் தளபதிகள் உட்பட 50 நக்சல் தளபதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மிகவும் தேடப்படும் நக்சலைட்டுகளின் பட்டியலில் நக்சல் உயர்மட்ட தளபதிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சட்டீஸ்கரின் பீஜாபூரில் சிஆர்பிஎப் மற்றும் டி.ஆர்.ஜி.க்கு எதிரான தாக்குதலில் தொடர்புடைய நக்சல் தளபதி ஹித்மாவும் உள்ளார். இந்த தாக்குதலில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். தெற்கு பஸ்தார் கோட்ட நக்சல் தளபதிகள் ரகு, நாகேஷ் மற்றும் தர் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் பெண் நக்சலைட்டுகள் நாக்மணி, பீமா, சுஜாதா, ஜமிதி மற்றும் ரீனா ஆகியோரும் மேற்கண்ட பட்டியலில் உள்ளனர்.

பீஜாபூரில் பாதுகாப்புப் படையினரைத் தாக்கியது நக்சலைட்டுகளின் பி.எல்.ஜி.ஏ.வின் பட்டாலியன்-1 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது நக்சல் தளபதி ஹித்மா தலைமையிலான அணியினர் என்பதும் உளவு தகவல் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே, நக்சல்களுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும்’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: