திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டியது: திற்பரப்பில் குளு குளு சீசன்

குலசேகரம்: குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. இது குமரியின் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் இங்கு குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் வந்து ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் குமரியில் கடந்த சில வாரங்களாக கொழுத்திய வெயில் காரணமாக நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. திற்பரப்பில் அருவியாக விழும் கோதையாறும் வறண்டு அருவியில் மிக குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் மதியத்துக்கு மேல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையுடன் வெயில் கொழுத்தி வந்த நிலையில், தற்போது சில நாட்களாக பெய்துவரும் மழை வெயிலின் வெம்மையை குறைத்துள்ளது. அதன்படி நேற்று மதியம் கனமழை பெய்த நிலையில் தொடர்ந்து இருண்ட நிலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளது. இன்று காலையும் இதேநிலை நீடித்து வருகிறது. அவ்வப்போது இதமான காற்றும் வீசி குளு குளு சீசன் நிலவி வருகிறது. இந்த காலநிலை பயணிகளை குதுகலபடுத்தி உள்ளது.

Related Stories: