மாஸ்க் அணியாவிட்டால் ரேஷன் பொருள் இல்லை-திருவில்லிபுத்தூரில் அதிரடி அறிவிப்பு

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூரில் மாஸ்க் அணிந்து வராவிட்டால் ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அதிகாரி கூறியுள்ளார்.கொரோனா 2ம் அலை பரவி வருவதால் 45 வயதிற்குட்பட்ட அனைவரும் தடுப்பூசி  போட வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. அத்துடன் மாஸ்க், சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க வருபவர்கள்மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்பு தடுப்பது தொடர்பான ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 76 ரேஷன் கடையில் சேர்ந்த சுமார் 52க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். அதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதித்து பொருட்கள் வழங்க வேண்டும்.  

வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேகைப்பதிவு பதிவாகாவிட்டால் கூட பதிவேடு மூலம் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறுகையில், 100 சதவீத கைரேகை மூலம் ரேஷன் பொருள் வழங்கும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்படும். மேலும் கலெக்டர் விருது பெற பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

Related Stories: