கர்நாடக மாநில அரசு பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி: ராமலிங்கரெட்டி குற்றச்சாட்டு

பெங்களூரு: அரசு போக்குவரத்து கழக பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்க மாநில அரசு  முயற்சித்துள்ளது. அப்படி செய்தால் அவர்கள் மக்களுக்கு சரியான முறையில்  சேவை செய்ய மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார். பெங்களூரு குயின்ஸ் சாலையில் அமைந்துள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ராமலிங்கரெட்டி கூறியதாவது:

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களின் 10 அம்ச கோரிக்கையை முன்வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது மாநில அரசு சார்பாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதே போல் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தொழிலாளர்கள் தங்களை அரசு தொழிலாளர்களாக நியமனம் செய்ய வேண்டும், 6-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றவில்லை. இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி தற்போது மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போதே இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என்று மாநில அரசு தெரிவித்திருக்க வேண்டும். அப்போது மழுப்பலான பதில் அளித்த காரணத்தால் தற்போது மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் 5 நாட்கள் கடந்து 6-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதில் பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதே போல் தினமும் ஒரு கோடி மக்கள் பஸ்சில் பயணம் செய்து வந்தனர். தற்போது பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். நான்கு மண்டலங்களில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நோட்டீஸ் வழங்குவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தேவையற்றது. அவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க மாநில அரசு முழுமையாக செயலிழந்துள்ளது. அரசு போக்குவரத்து கழக பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்க மாநில அரசு முயற்சித்துள்ளது. அப்படி செய்தால் அவர்கள் மக்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய மாட்டார்கள். இதனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்களிடம் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதே போல் பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களும் முன் வர வேண்டும்’’ என்றார்.

Related Stories: