திருவல்லிக்கேணியில் கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட தனியார் நிறுவன ஊழியர் பலி: 3வது நாளிலேயே பரிதாபம்

சென்னை: திருவல்லிக்கேணியில் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் திடீரென மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஏழுமலை(39). கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரானா தொற்று இருந்தது தெரியவந்தது. 40 வயதுக்கு குறைவாக இருந்ததால் ஏழுமலை மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். கொரோனா தொற்று உறுதியான 3வது நாளில் தொற்றின் வீரியம் காரணமாக ஏழுமலைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் படி விரைந்து வந்த போலீசார் சுகாதார அதிகாரிகளுடன் உயிரிழந்த ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூராம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் வசித்து வந்த வீடு முழுவதும் கிருமிநாசனி தெளித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுத்தப்படுத்தினர். கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமையில் இந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருகில் அதிகபட்சமாக 157 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: