அரவக்குறிச்சி நகரில் ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பழுது: குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி நகரில் உள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த கோடை வெயிலில் தண்ணீருக்காக அவதிப்படும் மக்கள் உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி அய்யாவுநகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு காவிரி கூட்டு குடிநீர் மூலம் 10 தினங்களுக்கு ஒருமுறை இரண்டுமணி நேரம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை போக்க பிளாஸ்டிக் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் மின் மோட்டார் பொருத்தி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த பல மாதங்களுக்கு முன், ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனால் அங்கு தொட்டிக்கு தண்ணீர் நீரப்ப முடியாமல் இருந்தது. இந்நிலையில் அதில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் வரும் பைப் மற்றும் மின் உபகரணங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து விட்டது. இதனால் தற்போது அங்கு சீரான குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் அருகிலுள்ள பகுதிக்கு குடிநீருக்காக அலைந்து திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரிக்கும் என்பதால், ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டரை மீண்டும் பொருத்தி, சேதமடைந்த பைப்களை சீரமைக்க சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று தண்ணீருக்காக அவதிப்படும் அரவக்குறிச்சி அய்யாவுநகர் மக்கள் உடனடியா சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: