இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நீரை கிடைக்காமல் தடுக்க சதி திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டம்: 30,000 கோடி கிலோவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு

புதுடெல்லி: இமயமலையில் இருந்து உருவாகும் பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் பாய்வதற்கு முன்பாகவே, திபெத்தில் மெகா அணை கட்டி தடுக்க சீனா திட்டமிட்டுள்ளது. அங்கு உலகின் மிகப் பெரிய நீர்மின் நிலையமும் அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறது. சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா - வங்கதேசம் வழியாக பயணிக்கும் பிரம்மபுத்திரா நதி, ஆசியாவில் வற்றாத ஜீவ நதிகளில் ஒன்றாகும். இந்த நதியின் குறுக்கே திபெத்தின் மொடோ மாவட்டத்தில் அணை கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இது சாதாரண அணை அல்ல, உலகின் மிகப்பெரிய பிரமாண்ட அணை. பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் பாய்வதற்கு முன்னரே, அந்த தண்ணீரை தடுத்து நிறுத்தக் கூடிய அணை. அதோடு, அங்கு நீர்மின் நிலையம் ஒன்றை கட்டவும் சீனா முடிவு செய்துள்ளது.

மத்திய சீனாவின் யாங்ட்சே நதியில் மூன்று மலைகளுக்கு நடுவே, ஆழ்பள்ளத்தாக்கு அணை கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணை இதுதான். இந்த அணையின் சாதனையை தற்போதைய புதிய அணை முறியடிக்க உள்ளது. அதாவது, உலகிலேயே மிக நீளமான, ஆழமான பள்ளத்தாக்கில் கட்டப்படும் இதில், ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணை, கடல் மட்டத்தில் இருந்து 4,900 அடி உயரத்தில் கட்டப்பட உள்ளது.

இது குறித்து சீனா தனது 14வது ஐந்தாண்டு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி இந்தாண்டு இறுதியில் பணிகள் தொடங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக திபெத்தின் புகழ்பெற்ற நீர்மின் நிலையம் அமைக்கும் நிறுவனத்துடன் சீன மின்துறை ஒப்பந்தமும் செய்துள்ளது. இந்த திட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பிரம்மபுத்திரா நதி நீரை பங்கீட்டு கொள்ளும் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அணை கட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பழங்குடியின மலைவாழ் மக்கள் விரட்டப்படுவார்கள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, சீன தொழிலாளர்கள் நிரந்தர குடிகளாக மாறும் அபாயமும் இருப்பதாக கூறுகின்றனர். மேலும், இந்த அணையால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம், சீன அணைக்கு எதிராக இந்திய அரசு தனது எல்லைக்குள் பிரம்மபுத்திரா நதியில் மற்றொரு அணை கட்டவும் யோசித்து வருகிறது.

Related Stories: