கேரள சபாநாயகர் தற்கொலை முயற்சி? பேஸ்புக்கில் மறுப்பு

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து தங்கம் கடத்திய சொப்னா தலைமையிலான கும்பல், இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தி உள்ளது. இது தொடர்பாக சுங்க இலாகா விசாரணை நடத்தியது. அதில், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்காகவும், சொப்னா கும்பல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் ஸ்ரீராம கிருஷ்ணன் மறுத்து வந்தார். இதனால், கடந்த 9ம் தேதி சுங்க இலாகா அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணனின் வீட்டுக்கே நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சொந்தமான ரகசிய அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் சுங்கா இலாகா சோதனை நடத்தியது. இந்நிலையில், ஸ்ரீராமகிருஷ்ணனிடம் கூடுதல் விசாரணை நடத்த சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், அவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக திடீர் பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், இதை ஸ்ரீராமகிருஷ்ணன் மறுத்துள்ளார். ‘நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல. எனது ரத்தத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் நபர்கள் மத்தியில் நான் அடிபணிய ஒருபோதும் தயாராக இல்லை,’ என அவர் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: