நகரின் முக்கிய சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து தடைப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கோடை துவங்கிய நிலையில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோடை சீசனில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இந்நிலையில், நகரின் முக்கிய சாலையில் உலாவரும் கால்நடைகளால் அடிக்கடி போக்குவரத்து தடைபடுகிறது. பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிய விட்டு விடுகின்றனர்.

இதில், குதிரைகளே அதிகளவு நகரின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இவைகள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் வலம் வருவதாலும், ஒன்றுடன் ஒன்று விளையாடி அல்லது மோதிக் கொண்டு வாகனங்கள் மீது மோதுகின்றன. இதனால், வாகனங்கள் பழுது அடைவதோடு, போக்குவரத்து நெரிலும் ஏற்படுகிறது. இதே போன்று, ஊட்டி நகரில் மட்டுமின்றி புற நகர் சாலைகள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில் தற்போது வளர்ப்பு எருமைகள், மாடுகள் மற்றும் ஆடுகள் என கால்நடைகள் வலம் வரும் நிலையில் அடிக்கடி வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. கடந்த சில மாதங்ளுக்கு முன் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது வந்தது.

ஆனால், தற்போது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், மீண்டும் கால்நடைகள் தொல்லை ஆரம்பித்துவிட்டன. எனவே, நகராட்சி நிர்வாகம் சீசன் முடியும் வரையாவது நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: