ஆனைமலை அருகே கழிவு கொட்டிய 3 டிப்பர் லாரி சிறைபிடிப்பு: வருவாய்த்துறையிடம் ஒப்படைத்த விவசாயிகள்

ஆனைமலை: கோவை ஆனைமலை அருகே தமிழக பகுதியில் கேரளா கழிவு கொட்டிய 3 டிப்பர் லாரிகளை நேற்று விவசாயிகள் சிறைபிடித்து வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர். தமிழக-கேரளா எல்லைப் பகுதியான கோவை மாவவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், கேரளா  மாநிலத்திலிருந்து மருத்துவம், இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே செமனாம்பதி இரட்டை மடை பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டனி ஜோஸ் என்பவரது தோட்டத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து நேற்று அதிகாலை 3 டிப்பர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி கொட்டினர்.

இத்தகவலறிந்து அங்கு சென்ற விவசாயிகள் லாரிகளை சிறைபிடித்து விசாரித்தனர். அப்போது டிப்பர் லாரிகளில் வந்தவர்கள் தப்பி ஓடினர். இத்தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை ஆய்வு செய்தனர். கழிவு கொண்டு வந்த லாரியில் கேரள மாநில அரசு பணிக்காக இயக்கும் வாகனம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து லாரிகளை கைப்பற்றிய அதிகாரிகள் தோட்டத்து உரிமையாளர் கேரளாவை சேர்ந்த ஆண்டனி ஜோசை தேடி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தமிழக-கேரள எல்லை வழியாக கேரளாவிலிருந்து அடிக்கடி இதுபோன்ற கழிவுகளை கொண்டு வந்து விவசாய நிலங்களில் கொட்டி வருவதால், நிலத்தடி நீர் மாசுபட்டு கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கேரள எல்லைப் பகுதியில் உள்ள போலீசாரின் சோதனைச்சாவடிகளில் முறையான கண்காணிப்பு பணி நடைபெறுவதில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: