டெல்லியை தொடர்ந்து நொய்டா, காஜியாபாத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்: ஏப்.17 வரை கட்டுப்பாடுகள்

நொய்டா: டெல்லியை தொடர்ந்து நொய்டா, காஜியாபாத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்.17 வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இந்த நேரத்தில் வெளியே சென்று வர அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட சென்றால் கூட இ பாஸ் வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதே ஊரடங்கு நடத்தை விதிமுறைகள் தற்போது டெல்லி அருகே உள்ள நொய்டா மற்றும் காஜியாபாத் மாவட்டங்களில் அமல்படுத்தி உபி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்த இரண்டு மாவட்ட அதிகாரிகள் நேற்று பிறப்பித்தனர்.

இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கவுதம்புத்தாநகர் மாவட்டம், காஜியாபாத் மாவட்டம் ஆகியவற்றில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தன. ஏப்ரல் 17ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: ˜இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்கள், மருத்துவம் உள்ளிட்ட அவசர சேவைகள் ஆகியவற்றிக்கு இரவு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ˜அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் ஏப்ரல் 17 வரை எந்தவித நேரடி வகுப்பும் நடத்தக்கூடாது. அதே சமயம் மருத்துவம், பாராமெடிக்கல், நர்சிங் கல்லூரிகளுக்கு மட்டும் தடை இல்லை ˜அதே சமயம் அனைத்து தேர்வுகள் மற்றும் பயிற்சி தேர்வுகளுக்கும் தடை இல்லை ˜மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு தடை இல்லை.

˜கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவ உதவி பெற விரும்பும் அனைவருக்கும் எந்தவித தடையும் இல்லை ˜விமானநிலையம், ரயில், பஸ்நிலையங்களுக்கு செல்ல விரும்பும்நபர்கள் உரிய பயணச்சீட்டை காட்டி பயணம் செய்து கொள்ளலாம்.   ˜தடை உத்தரவை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்து கவுதம்புத்தாநகர் மாவட்ட கலெக்டர் சுகாஷ் கூறுகையில்,’ அனைவரும் முக கவசம் அணிவது, கொரோனாவுக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது, குறிப்பாக பணிபுரியும் இடங்களில் இவற்றை கடைபிடிப்பது முக்கியம் ஆகும். இதை கண்காணிக்க உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்றார். காஜியாபாத் கலெக்டர் அஜய் சங்கர் பாண்டே கூறுகையில்,’ கொரோனா வேகமாக காஜியாபாத்தில் பரவுவதை தடுக்க இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: