நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளின் நிலை அறியும் தகவல் பலகை இல்லை: குழந்தைகள், லக்கேஜ்களுடன் ஓடி அலையும் பரிதாபம்

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளின் நிலை அறியும் தகவல் பலகை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக முக்கிய ரயில்கள் செல்கின்றன.  கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் தொடங்கிய பின், டவுன் ரயில் நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. கூடுதல் தண்டவாளங்கள், பயணிகள் நிழற்குடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த டிக்கெட் கவுண்டர்கள், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்டவை சமீபத்தில் திறக்கப்பட்டன. இந்த ரயில் நிலையத்தில் திருநெல்வேலி - பிலாஸ்பூர், திருநெல்வேலி - ஜாம்நகர், திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயில் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. சென்னை - திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாகவே இயக்கப்படுகின்றன.

தற்போது அனைத்து ரயில்களும் முன் பதிவு உள்ள ரயில்களாகவே இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் தங்கள் முன்பதிவு செய்துள்ள ரயில் பெட்டிகள் எந்த இடத்தில் வருகின்றது என்பதை அறிய முடியாமல் ரயில் வந்து நின்ற பிறகு அங்கும், இங்குமாக ஓடி ரயிலில் ஏற வேண்டியுள்ளது. இதனால் வயதானோர், மாற்று திறனாளிகள், குழந்தைகள் மற்றும் நெடுந்தூரம் பயணம் செய்ய உடமைகள் கொண்டு வரும் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ஆகவே நடைமேடைகளில் ரயில் பெட்டிகளின் நிலவரம் அறியும் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ராம் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள திருவனந்தபுரம் கோட்ட முதுநிலை கோட்ட வணிக மேலாளர், ரயில் பெட்டிகளின் நிலவரம் அறியும் தகவல் பலகை டிஜிட்டல் மற்றும் சாதாரண தகவல் பலகை என 2 வகையாக வைப்பதற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்படும் பணிகள் நடைபெறுவதாகவும், இந்த பட்டியலில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம் கோட்டத்தில் தமிழகத்தில் உள்ள கிராசிங் ரயில் நிலையங்களான இரணியல், நாகர்கோவில் டவுண், குழித்துறை, ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நான்குநேரி ஆகிய ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் ரயில் பெட்டிகளின் நிலவரம் அறியும் தகவல் பலகை வைக்க வேண்டும். மீதமுள்ள சிறிய ரயில் நிலையங்களான ஆளூர், பள்ளியாடி, குழித்துறை மேற்கு, தோவாளை, பணக்குடி, மேலப்பாளையம், செங்குளம் , காவல்கிணறு ஆகிய ரயில் நிலையங்களில் சாதாரண பெயின்ட் மூலம் எழுதப்பட்ட பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாகர்கோவில் சந்திப்பு, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்கள் ரயில்கள் புறப்படும் ரயில் நிலையமாக இருப்பதால் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ரயில் அறிவிப்பு டிஜிட்டல் தகவல் பலகை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதும் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: