பென்னாகரம் அருகே கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு:அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, கிராமத்திற்குள் புகுந்து கடந்த 14 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதிக்கு வந்தன. அங்கு கடும் வறட்சி நிலவி வருவதால், யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித் திரிந்து வந்தன. இந்த யானைகள் உணவு, தண்ணீர் தேடி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளன. வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளில் ஒரு ஆண் யானை, கடந்த 14 நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியூர், ஒட்டனூர், நாகமரை, காட்டூர், நெருப்பூர், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. அங்குள்ள பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி, ஏரியூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இந்த யானை, நெருப்பூர் கிராமத்திற்குள் புகுந்து 2 மாடுகளை தாக்கியது.

மேலும், அப்பகுதியில் மின்கம்பம் தாழ்வாக இருப்பதால், யானை ஆவேசம் கொண்டு, மின் கம்பங்களை முட்டி சாய்த்து விடக்கூடாது என்பதற்காக, மின் வாரியத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பை துண்டித்து, யானையை கடந்த 5ம் தேதி காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் மீண்டும் குடியிருப்பு பகுதியில், ஒற்றை யானை புகுந்தது. இதையடுத்து, வனத்துறையினர் நேற்று நெருப்பூர் கிராமம் பதனவாடி அருகே சுற்றித்திரிந்த யானையை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, முத்தையன் கோவில் தடுப்பணை வனப்பகுதியில் யானையை விரட்டி சென்ற வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தினர். இதனால் மயக்க நிலையில் இருந்த யானையை, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கயிறு கட்டி கிரேன் உதவியுடன் வனத்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று முதுமலை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. கிராமத்திற்குள் புகுந்து 2 வாரமாக அட்டகாசம் செய்து யானை பிடிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: