சர்வதேச விமான நிலையமாக மதுரையை அறிவிக்க வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கக் கோரிய வழக்கில், மத்திய விமான போக்குவரத்து துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா முகவர்கள் சங்கத் தலைவர் சதீஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 2011ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 3வது பெரிய நகரமாக மதுரை வளர்ச்சி பெற்றுள்ளது. இந்திய அளவில் 44வது இடத்தில் உள்ளது. மதுரை விமான நிலையம் மதுரை மக்களுக்கு மட்டுமின்றி, தென்மாவட்ட மக்கள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக உள்ளது. கடந்த 2012க்கு பிறகு துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் வந்து செல்கின்றன.

ஆனால், மதுரையை விட சிறிய அளவிலான உ.பி குஷிநகர் மற்றும் திருப்பதி விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுமென நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுத்தும் பலன் இல்லை. எனவே, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும், மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘அரசின் கொள்கை முடிவில் தலையிட வேண்டியதில்லை. மக்கள் பிரதிநிதிகள் மூலம் அரசிடம் வலியுறுத்தலாமே’’ என்றனர். பின்னர் மனுவிற்கு மத்திய விமான போக்குவரத்து துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.26க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: