நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

நாகை : நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த 6 சட்டசபை தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வாக்குப்பதிவு மையத்திற்கு வருவோர் அனைவரும் முககவசம் அணிந்து வந்தனர்.

இதை தொடர்ந்து வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதன்பின்னர் வாக்காளர்களுக்கு வலது கையில் அணிந்து கொள்ள ஒரு கையுறை வழங்கப்பட்டது. இதை அணிந்து கொண்டு வாக்குப்பதிவு மையத்திற்கு சென்றவுடன் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. வாக்குப்பதிவு மையத்திற்கு வரும் வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க அறிவுரை வழங்கப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் 2,75,827 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,35,930 ஆண் வாக்காளர்களும் 1,39,890 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 7 பேரும் உள்ளனர் இவர்கள் வாக்களிக்க பூம்புகார் தொகுதியில் 383 வாக்கு சாவடிகள் அமைக்கபட்டிருந்தது.

வாக்குசாவடியில் பயன்படுத்த 460 வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கபட்டிருந்தன. 383 வாக்கு சாவடிகளிலும் 1840 வாக்கு சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு கிருமிநாசினி கைகளில் தெளிக்கபட்டு பின் முக கவசம், கையுறை வழங்கபட்டது. மேலும் உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யபட்டது. 11 வகையான ஆவணங்களை காட்டி வாக்களிக்க அனுமதிக்கபட்டனர். திருக்களாச்சேரி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல், ஆக்கூர், உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வாக்கு சாவடியில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா சட்டமன்ற தேர்தலில் ஆயக்காரன்புலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஆயக்காரன்புலம் இரண்டாம் தேதி முதலியார் குத்தகை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த தருமன் மனைவி அம்மாக்கண்ணு (104) ஆட்டோவில் வந்து தனது ஜனநாயக கடமையை தானே நிறைவேற்றினார்.

ஆட்டோவில் வந்த அம்மாக்கண்ணு வாக்குச்சாவடிக்கு முன்பு இறங்கி வீல் சேரில் தனது பேரன் துணையுடன் வந்து வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்களித்தார். இதனை அங்கு கூடியிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற அரசின் பரப்புரையை நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மூதாட்டி வந்து வாக்களித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

1861 வாக்குச்சாவடிகளில் 3215 இயந்திரம் பயன்பாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. 1861 வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 88 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 156 மண்டல அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இந்த வாக்குச்சாவடிகளில் 3 ஆயிரத்து 215 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2 ஆயிரத்து 450 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2 ஆயிரத்து 650 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.

இதில் மயிலாடுதுறையில் திருவிழுந்தூர் வாக்குச்சாவடி மையத்திலும், திருமருகல் அருகே வாழ்குடி வாக்குச்சாவடி மையத்திலும் 30 நிமிடம் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படவில்லை. பின்னர் அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

Related Stories: