அரூர் அருகே வள்ளிமதுரை கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க கோரி வாக்களிக்க மறுத்து மக்கள் போராட்டம்-தாமதமானதால் டோக்கன் விநியோகம்

அரூர் : அரூர் அடுத்த வள்ளிமதுரை கிராமத்தில் செல்போன் டவர் அமைக்ககோரி, கிராம மக்கள் வாக்களிக்க மறுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 1355 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் செல்போன் டவர் இல்லாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

எனவே இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என வாழைத்தோட்டம், வள்ளிமதுரை, தோல்துாக்கி, தாதராவலசை மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 7மணிக்கு இப்பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது, வாக்காளர்கள் அதிகம் வராததால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. காலை 11மணி வரை 110 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

இதையடுத்து 11.30 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த மக்கள், தங்களது பகுதியில் செல்போன் டவர் அமைக்ககோரி வாக்களிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த, தேர்தல் நடத்தும் அலுவலரும், அரூர் ஆர்டிஓ.,வுமான முத்தையன், தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கிராமமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாலை 3 மணியளவில், தங்களது போராட்டத்தை மக்கள் கைவிட்டு வாக்களிக்க சென்றனர்.

தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதால், இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு முழுமையாக நடைபெறவில்லை. இதையடுத்து வாக்களிக்க வந்தவர்களிடம் டோக்கன் கொடுக்கப்பட்டு, வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது. இதனால் இரவு வரை வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: