விறுவிறுப்பாக நடந்த ஜனநாயக திருவிழா 6 சட்டமன்ற தொகுதிகளில் 77.30 சதவீதம் வாக்குப்பதிவு-முதல்தலைமுறை வாக்காளர்கள் உற்சாகம்

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 77.30சதவீதம் வாக்குகள் பதிவானது. விறுவிறுப்பாக நடந்த ஜனநாயக திருவிழாவில் முதல்தலைமுறை வாக்காளர்களும், வயதானவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த 6 தொகுதியிலும் திமுக, அதிமுக, பாமக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட 86 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

முன்னதாக அவருக்கு சானிடைசர் வழங்கப்பட்டது வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. பாலித்தீன் கையுறை வழங்கப்பட்டது. பின்னர் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பெயர் சரிபார்க்கப்பட்டு, கையில் மை இடப்பட்டு, ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்.

வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய சின்னத்துக்கு வாக்களித்து விவிபேட் மெஷினில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்த்து தெரிந்து கொண்டனர்.

பின்னர் பீப் சத்தம் வந்தவுடன் வாக்காளர்கள் வெளியே செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி பதிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டருக்கு முன்பாக அரசியல் கட்சியினர் அமர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கி உதவி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்கள் செல்லாமல் தடுத்தனர். வாக்களிக்கச் செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் வாக்குப்பதிவு நடந்தது. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவான வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டன.

நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் சதவீதத்தில் வருமாறு: ஊத்தங்கரை-15, பர்கூர்-11, கிருஷ்ணகிரி -11, வேப்பனஹள்ளி -9, ஓசூர் -12, தளி -8 சதவீதம் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி ஊத்தங்கரை -18, பர்கூர் -15, கிருஷ்ணகிரி -32, வேப்பனஹள்ளி -17, ஓசூர் -21, தளி -17 சதவீதம் பதிவானது. பகல் 1 மணி நிலவரப்படி, ஊத்தங்கரை -41, பர்கூர் -37, கிருஷ்ணகிரி -44, வேப்பனஹள்ளி -28, ஓசூர் -32, தளி -46 சதவீதம் பதிவானது.

மாலை 3 மணி நிலவரப்படி, ஊத்தங்கரை -53, பர்கூர் -55, கிருஷ்ணகிரி -61, வேப்பனஹள்ளி -53, ஓசூர் -45, தளி -61 சதவீதம் பதிபானது. மாலை 5 மணி நிலவரப்படி, ஊத்தங்கரை-71, பர்கூர் -67, கிருஷ்ணகிரி -69, வேப்பனஹள்ளி -66, ஓசூர் -53, தளி -65 சதவீதம் பதிவானது. மாலை 7 மணி மற்றும் இறுதி நிலவரப்படி ஊத்தங்கரை-78.30, பர்கூர்-79, கிருஷ்ணகிரி-78.50, ஓசூர்-70.21, தளி-76.49, வேப்பனஹள்ளி-81.30சதவீத வாக்குகள் பதிவானது.மாவட்டத்தில் சராசரியாக  77.30 சதவீத வாக்குகள் பதிவானது.

மூதாட்டிகள் ஆர்வம்

சூளகிரி அண்ணா நகரை சேர்ந்த கண்ணம்மா(105), தபால் வாக்கு வேண்டாம் எனக்கூறி, பேரன்கள் உதவியுடன் வீல்சேரில் வந்து சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தார். இதேபோல், சூளகிரி அண்ணா நகரை சேர்ந்த மூதாட்டி மெணிசியம்மாளை(95), அவரது பேரன் திம்மராஜ், தூக்கி வந்து சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வைத்தார்.

Related Stories: