உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு-பல இடங்களில் இயந்திரத்தில் கோளாறு

உடுமலை :  உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வலது கைக்கு கையுறை வழங்கப்பட்டதுடன், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்பே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், துங்காவியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன், மூங்கில்தொழுவு துவக்கப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அமமுக வேட்பாளர் சண்முகவேலு, சாமராவ்பட்டி துவக்கப்பள்ளியில் வாக்களித்தார்.உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன், உடுமலை நகராட்சி 4-வது வார்டு துவக்கப்பள்ளியில் வாக்களித்தார். காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு சொந்த ஊரான தாராபுரம் நல்லாம்பாளையத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

இயந்திரம் பழுது:

எரிசனம்பட்டி கிராமத்தில் 56-வது வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கவில்லை. இதனால் வாக்காளர்கள் காத்திருந்தனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒரு மணி நேரம் கழித்து இயந்திரம் சரி செய்யப்பட்ட பிறகு வாக்காளர்கள் வாக்களித்தனர்.

சோமவாரப்பட்டி ஊராட்சி பெதப்பம்பட்டியில் 94-வது வாக்குச்சாவடியில், 34 பேரின் வாக்குகள் பதிவாகவில்லை. இது பின்னர்தான் தெரியவந்தது. இதையடுத்து, மின்னணு இயந்திரம் செய்யப்பட்டு, 34 பேரையும் மீண்டும் வரவழைத்து வாக்களிக்க செய்தனர். இதன்காரணமாக 1 மணி  நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

அடிதடி:

பூலாங்கிணறில் வாக்குச்சாவடிக்கு முன்பு அதிமுக, திமுகவினர் திரண்டிருந்தனர். அவர்களிடடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Related Stories: