தேர்தல் நடத்தை விதியை மீறி வாக்குசாவடிக்குள் தாமரை சின்னத்துடன் வாக்களித்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்!: தகுதி நீக்கம் செய்ய காங்.கோரிக்கை..!!

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்குசாவடிக்குள் தாமரை சின்னம் அணிந்து சென்ற பாஜக வேட்பாளரால் சர்ச்சை வெடித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரக்கூடிய நிலையில், அதிமுகவின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒருசிலர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன். இவர் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசன் மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட மிக முக்கியமான 2 வேட்பாளரை எதிர்த்து களம் காண்கிறார்.

இந்நிலையில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட பேட்ஜ் அணிந்து வானதி சீனிவாசன் வாக்குசாவடிக்குள் சென்று வாக்களித்திருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு கட்சி சின்னம் காட்டக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வானதி சீனிவாசன் தாமரை சின்னத்துடன் வாக்களித்துள்ளார். தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வானதி சீனிவாசனை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் வேட்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல் சென்னை ஆவடி தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் இரட்டை இலை சின்னத்துடன் வாக்களித்ததால் சர்ச்சை எழுந்தது. தேர்தல் விதியை மீறி இரட்டை இலை சின்னத்துடன் வாக்களித்த மாஃபா பாண்டியராஜனை தகுதிநீக்கம் செய்ய திமுக வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே 2014ல் குஜராத்தில் வாக்களித்துவிட்டு தாமரை சின்னத்தை காட்டிய மோடி மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: