மயிலாப்பூரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா தட்டிக்கேட்ட திமுகவினர் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க கோரி நள்ளிரவு காமராஜர் சாலையில் போராட்டம்

சென்னை: மயிலாப்பூர் தொகுதி நொச்சி நகரில் அதிமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.500 விநியோகம் செய்ததை தட்டிக்கேட்ட திமுகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து திமுகவினர் காமராஜர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் முடிவடைந்தது. சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள நொச்சி நகர் முழுவதும் நேற்று முன்தினம் இரவு அதிமுக சார்பில் வீடுகள் தோறும் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.500 வழங்கப்படுவதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற திமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வந்த அதிமுகவினரை தடுக்க முயன்றனர். அப்போது அதிமுகவினர் தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கினர்.

இதுகுறித்து திமுக சார்பில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுகவினருக்கு அதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுகவினரின் பணம்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்க கோரியும், திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மெரினா காமராஜர் சாலையில் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம், என்று கூறிவிட்டனர். பின்னர் கடும் போராட்டத்திற்கு பிறகு மயிலாப்பூர் தொகுதி தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து திமுகவினர் போராட்டத்தை திரும்ப பெற்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா காமராஜர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: