சொன்னதை செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் ஆதரவற்ற குழந்தைகள் மீது ராகுல், பிரியங்கா பாசம்

திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று மாலையுடன் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று, கேரளாவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பல்வேறு இடங்களில் நடந்த பேரணிகளில் பங்கேற்று, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவை திரட்டினார். மாலையுடன் பிரசாரம் முடிந்ததை தொடர்ந்து, அவர் திருவனந்தபுரத்துக்கு வந்தார். கேரளாவில் தற்போது பாஜ வசம் உள்ள ஒரே தொகுதியான நேமம் தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனால், இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளீதரனுக்கு ஆதரவாக ராகுல் பிரசாரம் செய்தார். மாலை 4.30 மணிக்கு பூஜாப்புரா மைதானத்தில் நடந்த மாநாட்டில் பேசினார். திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு, மாலை 6.30 மணிக்கு டெல்லி திரும்பினார்.

இதற்கிடையே, வயநாடு, கல்பெட்டாவிலுள்ள ஜீவன்ஜோதி ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுடன் ராகுலும், பிரியங்காவும் ஈஸ்டர் கொண்டாட திட்டமிட்டு இருந்தனர். தனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், பிரியங்கா இதற்கு வர முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், ராகுல் மட்டும் திட்டமிட்டப்படி அங்கு சென்று ஈஸ்டர் கொண்டாடினார். அவர்களுடன் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டார். அப்போது, ராகுலின் போனில் வீடியோ கால் மூலம் பிரியங்கா காந்தி பேசினார். அதில், குழந்தைகளுடனும் கலந்துரையாடினார். அப்போது, ‘இவர்கள்தான் என்னுடைய புதிய நண்பர்கள்,’ என பிரியங்காவுக்கு குழந்தைகளை ராகுல் அறிமுகம் செய்து வைத்தார். இதனால் அந்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த வீடியோவை ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories: