சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 22வது வெற்றி ஆஸி. மகளிர் அணி உலக சாதனை

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 22வது வெற்றியுடன் உலக சாதனை படைத்துள்ளது. பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீச... நியூசிலாந்து 48.5 ஓவரில் 212 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை லாரன் டவுன் 90 ரன், கேப்டன் ஏமி சாட்டர்த்வெய்ட் 32, அமேலியா கேர் 33 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. தரப்பில் மேகான் ஷுட் 4, நிகோலா கேரி 3 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 38.3 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி 65 ரன் விளாசினார். எல்லிஸ் பெர்ரி 56 ரன், ஆஷ்லி கார்ட்னர் 53 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேகான் ஷுட் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. ஆஸ்திரேலிய மகளிர் அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 22வது வெற்றியை வசப்படுத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது. முன்னதாக, ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி தொடர்ச்சியாக 21 போட்டிகளில் வென்றதே உலக சாதனையாக இருந்தது.

Related Stories: