400 நக்சலைட்கள் சுற்றிவளைத்து பயங்கர தாக்குதல் சட்டீஸ்கரில் மேலும் 17 வீரர்கள் வீரமரணம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில காட்டுப்பகுதியில் நூற்றுக்கணக்கான நக்சலைட்கள் ஒரே நேரத்தில் நடத்திய திடீர்  தாக்குதலில் மேலும் 17 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம், நக்சல்களின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா- பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மாநில போலீசார், துணை ராணுவ படையினர், கோப்ரா சிறப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் என 1,500 வீரர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த காட்டுப்பகுதியை சுற்றி வளைத்தனர். பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, நக்சல்களை தேடினர்.

அப்போது, ஜோனகுண்டா கிராமத்தில் உள்ள காட்டில் பதுங்கி இருந்த நக்சல்களை பாதுகாப்பு படையினர் நெருங்கினர். இதனால், வீரர்கள் மீது நக்சல்கள் திடீரென இயந்திர துப்பாக்கிகளால்  சுட்டனர். காட்டின் மேல் பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட நக்சல்கள், வீரர்களை மூன்று பக்கத்தில் இருந்தும் சுற்றி வளைத்து சுட்டனர். டிகுண்டுகளையும் வீசி தாக்கினர். மேலிருந்து நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலால்  வீரர்கள் சிறிது நிலை குலைந்த பிறகு, நக்சல்களுக்கு கடும் பதிலடி கொடுத்தனர். அதை தாக்குப் பிடிக்க முடியாமல் நக்சல்கள் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு அங்கு வீரமரணம் அடைந்து விழுந்திருந்த 5 வீரர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 30க்கும் மேற்பட்ட வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 18 வீரர்களை காணவில்லை என்பது தெரிய வந்தது. உடனே, சண்டை நடந்த காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

 அப்போது, அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த நிலையில் 17 வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. இது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், நக்சல்களின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிஆர்பிஎப் ஆய்வாளர் ஒருவரை இன்னும் காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சட்டீஸ்கரில் நடந்துள்ள இந்த துயரச் சம்பவம், தேசிய அளவில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.தலைவர்கள் இரங்கல்: சட்டீஸ்கரில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘சட்டீஸ்கரில் நக்சல்களை எதிர்த்துப் போரிட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டது ஆழ்ந்த வேதனை தருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு என இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீரர்களின் தியாகத்தை இந்த தேசம் ஒருபோதும் மறக்காது,’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், ‘உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்த தேசம் நன்றிக்கடன் பட்டுள்ளது. நக்சலிசத்தை எதிர்த்து போரிடுவதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். மத்திய துணை ராணுவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சட்டீஸ்கர் காங்.அரசு செய்யும்,’ என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த நாடும், சோகத்திலும், கோபத்திலும் இருக்கிறது. துணிச்சல் மிகுந்த வீரர்களின் உயிர்தியாகத்தை இந்த நாடு எப்போதும் நினைவில் கொள்ளும். அவர்களின்  குடும்பங்களுக்கு ஆறுதலையும், காயம் அடைந்தவர்களுக்கு ஆரோக்கியத்தையும் இறைவன் வழங்கட்டும்,’ என கூறியுள்ளார்.

போர் தொடரும்

அமித்ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சட்டீஸ்கரில் நக்சல்களுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த துணிச்சல் மிக்க வீரர்களின் உயிர் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன். இந்த நாடு அவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்காது. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். நக்சல்களுக்கு எதிரான போர் தொடரும்,’ என கூறியுள்ளார்.

12 நக்சல்கள் பலி

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 10 முதல் 12 நக்சலைட்கள் கொல்லப்பட்டு உள்ளனர். காடுகளில் விழுந்து கிடந்த அவர்களின் சடலங்களை, நக்சலைட்கள் தப்பிச் செல்லும் போது தூக்கிச் சென்று விட்டனர். எல்லா சடலங்களையும் அவர்கள் டிராக்டரில் ஏற்றிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா

அசாம் மாநிலத்தில் நேற்று 3ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈடுபட்டு இருந்தார். சட்டீஸ்கரில் சம்பவத்தை கேள்விப்பட்டதும், பிரசாரத்தை பாதியில் முடித்து கொண்டு உடனே டெல்லி திரும்பினார். சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிலவரத்தை கேட்டறிந்தார். மேலும், சம்பவ இடத்துக்கு உடனடியாக செல்லும்படி சிஆர்பிஎப் இயக்குனர் ஜெனரல் குல்தீப் சிங்குக்கு உத்தரவிட்டார். மேலும், உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

Related Stories: