கோவை மாவட்ட எஸ்பி உத்தரவிட்டும் பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய போலீஸ் தாமதம்

கோவை: ேகாவை மாவட்ட எஸ்பி உத்தரவிட்டும் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய போலீசார் தாமதப்படுத்தி வருகின்றனர்.தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். 5 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து சமூக ஆர்வலர் சபரிமாலா ஒக்கிலிபாளையம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கே வந்த அதிமுகவினர், திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர். இனி எங்காவது பிரசாரம் செய்தால் நடப்பதே வேறு என மிரட்டினர். வடக்கிபாளையம் போலீசில் இது தொடர்பாக திமுக சார்பில் பார்த்தசாரதி புகார் அளித்தார். இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீண், உதவியாளர் வீராசாமி உட்பட 8 பேர் மீது கொலை மிரட்டல், தகாத முறையில் பேசுதல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவானது.

ஆனால் இதுவரை பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பிரசாரத்தின்போது திமுகவினர் குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கோபமடைந்து அவரின் தூண்டுதலால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இவரை கைது செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். போலீஸ் நடவடிக்கை எடுக்காத நிலையில், மாவட்ட எஸ்பி. அருளரசு, மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்கிடையே புதிய ஐ.ஜி. ஆக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். புதிய எஸ்பியாக செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்பி. பொறுப்பேற்றதையடுத்து, பொள்ளாச்சி ஜெயராமன் மகனை கைது செய்ய வடக்கிபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆனால் வடக்கிபாளையம் போலீசார் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கவில்லை.

எங்களை யாரும் கைது செய்ய முடியாது எனக்கூறி பிரவீண், நேற்று பொள்ளாச்சி வட்டாரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். புகாரில் சிக்கிய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் பிரிவில் புகார் அளித்தும், மண்டல ஐ.ஜி. அறிவுறுத்தியும், மாவட்ட எஸ்பி. உத்தரவு பிறப்பித்தும் கைது செய்யப்படாததற்கு எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சியினர் அதிகாரத்தால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: