கேரள கன்னியாஸ்திரிகளுக்கு தொந்தரவு: உத்தரபிரதேசத்தில் 2 பேர் கைது

ஜான்சி: உத்தரபிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகளுக்கு தொந்தரவு கொடுத்த இருவர் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஜான்ஸி நகருக்கு ரயிலில் வந்த இரண்டு கேரள கன்னியாஸ்திரிகளை, பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டு கடந்த 2 வாரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த செயலை கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்தார். ஆனால், இது தவறான தகவல் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார். இருந்தும் இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி அரிந்தம் கோஷ் கூறுகையில், ‘ராஷ்டிர பக்த சங்கத்  தலைவர் அன்சால் அர்ஜாரியா மற்றும் இந்து ஜாக்ரன் மஞ்ச் செயலாளர் புர்கேஷ் அமாரியா ஆகியோர் ஜான்சி ரயில் நிலையத்தில் கேரள கன்னியாஸ்திரிகளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் புகார் அளித்தனர். அதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளோம். கடந்த மார்ச் 19ம் தேதி, உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரள கன்னியாஸ்திரிகள், அதேபகுதியை சேர்ந்த இளம்  பருவபெண்களை மதமாற்றம் செய்ய அழைத்து சென்றதாக குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினார்.

Related Stories: