தோற்ற எரிச்சலில் மட்டையை உடைத்த மெட்வேதவ்: ஒசாகா அதிர்ச்சி தோல்வி

மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் காலியிறுதி போட்டிகளில் உலகின் 2ம் நிலை வீரர் டானில் மெட்வேதவ், 2ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகோ ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கும் மியாமி ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி ஒன்றில் உலகின் 2ம் நிலை வீரர் டானில் மெட்வேதவ்(ரஷ்யா), 12ம் நிலை வீரர் ரபர்டோ பாடிஸ்டா அகுட்(ஸ்பெயின்) ஆகியோர் மோதினர். அகுட் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி, மெட்வேதவுக்கு கடும் சவாலாக இருந்தார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கிலும் அகுட் வசப்படுத்தினார். அதனால் கடுப்பான மெட்வேதவ் தனது டென்னிஸ் மட்டையை உடைத்து நொறுக்கினார்.

அடுத்து புது மட்டையில் ஆடினாலும், முதல் செட்டில் தோற்றதால் ஏற்பட்ட ஏமாற்றம், அதனால் வந்த பதட்டம் காரணமாக மெட்வேதவ் ஏராளமாக சொதப்பினார். அதனை சரியாக பயன்படுத்திய அகுட் 2வது செட்டை 6-2 என்ற கணக்கில்  எளிதில் கைப்பற்றினார். எனவே நேர் செட்களில் மெட்வேதவை வீழ்த்திய அகுட், அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 32 நிமிடங்கள் நடந்தது. மியாமி ஓபன் பட்டத்தை முதல்முறையாக வெல்லும் கனவு கலைந்ததுடன், உலகின் 2வது நிலைக்கு உயர்ந்த 2வது வாரத்தில் மோசமான தோல்வியை சந்தித்த மெட்வேதவ் அதிர்ச்சியுடன் அரங்கை விட்டு வெளியேறினார்.

அதேபோல் மகளிர் ஒற்றையர் காலிறுதி ஒன்றில் உலகின் 2ம்நிலை வீராங்கனை நவோமி ஒசாகா(ஜப்பான்), 23ம்நிலை வீராங்கனை மரியா சக்காரி(கிரீஸ்) உடன் மோதினார். சுமார் ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் மரியா 6-0, 6-4 என நேர் செட்களில் ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு காலிறுதியில் கனடாவின் பியான்கா ஆண்டீரிஸ்கு(9ம் நிலை), 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் சாரா சோர்ரிபெசை(58ம்நிலை) வீழ்த்தினார். பியான்கா அரையிறுதியில் மரியாவுடன் மோதுகிறார்.

Related Stories: