மஜத யாருடனும் உள்ஒப்பந்தம் செய்யவில்லை: குமாரசாமி தகவல்

பெங்களூரு: பசவகல்யாண் தொகுதி இடைத்தேர்தலில் மஜத யாருடனும் உள்ஒப்பந்தம் செய்து ெகாள்ள வில்லை என்று முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.

 இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது: ``பசவகல்யாண் தொகுதி இடைத்தேர்தலில் மஜத சார்பாக இஸ்லாமிய வேட்பாளர் நிறுத்தியுள்ளதற்கு பா.ஜ.விடம் ரூ.10 கோடி பணம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.. ஜமீர் அகமதுகான் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் 2005-ம் ஆண்டு நடந்து முடிந்த சாம்ராஜ்பேட்டை தொகுதி இடைத்தேர்தலின் போது மஜத சார்பாக அவரை நிறுத்தி வெற்றிபெற செய்த போது தேர்தல் செலவுக்காக பா.ஜ.விடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். கட்சியில் இருக்கும் வரை தங்களை வளர்த்துக்கொண்டு வெளியே சென்ற பின்னர் கட்சி குறித்து தவறாக பேசி வருவது வழக்கமான ஒன்று.

மஜதவில் சாதி, மதம் என்று பார்க்காமல் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதே போல் தற்போதும் பசவகல்யாண் தொகுதியிலும் இஸ்லாமிய வேட்பாளருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த உள் நோக்கமும் கிடையாது. அதே போல் எந்த கட்சியுடனும் உள் ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை’’ என்றார். இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: ``பசவகல்யாண் தொகுதியில் 60 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மஜத சார்பாக இஸ்லாமிய வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார் இதை தொகுதி வாக்காளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: