வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில் ‘அவாமி லீக்’ இல்லாமல் தேர்தல் நடத்துவது ஜனநாயக படுகொலை: இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா அறிக்கை

 

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவர் போராட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து வெடித்த மாபெரும் கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதித்ததுடன், ஜூலை மாத படுகொலைகள் தொடர்பாக அவர் மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழக்குகளும் தொடரப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி மீதான தடையை நீக்கியுள்ள இடைக்கால அரசு, வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி வங்காளதேச நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவாமி லீக் கட்சி ஓரங்கட்டப்பட்டதை எதிர்த்து இந்தியாவில் இருந்தபடியே ஷேக் ஹசீனா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நாட்டின் மிகப் பழமையான மற்றும் பெரிய கட்சியான அவாமி லீக் இல்லாமல் தேர்தல் நடத்துவது ஜனநாயகப் படுகொலை. அவாமி லீக் இல்லாமல் நடக்கும் இந்தச் செயல்முறை ஒரு போட்டித் தேர்தல் அல்ல; இது இடைக்கால அரசு நடத்திக்கொள்ளும் மகுடாபிஷேகம்.

சட்டவிரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றியதை நியாயப்படுத்தவே அரசியல் சாசனச் சீர்திருத்தம் என்ற பெயரில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது ஒரு தேர்வு முறையே தவிர தேர்தல் அல்ல. ஜனநாயகப் போராட்டத்திற்கு இழைக்கப்படும் துரோகமான இந்தத் தேர்தல் நாடகத்தை எனது ஆதரவாளர்களும் பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும். எனக்கு எதிரான வழக்குகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் கவலையளிக்கிறது’ என்று அவர் அந்த அறிக்கையில் சாடியுள்ளார்.

 

Related Stories: