காஜிப்பூர் குப்பை கிடங்கில் தீ கிழக்கு மாநகராட்சி மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் கோபால் ராய் தகவல்

புதுடெல்லி: காஜிப்பூர் குப்பை கிடங்கில் தீப்பற்றுவதைத்  தடுக்க நடவடிக்கை எடுக்காத கிழக்கு டெல்லி மாநகராட்சியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் நேற்று தெரிவித்தார்.

கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜிப்பூர் குப்பை கிடங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீ பற்றி எரியத்தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியதோடு, அந்த பகுதியின் காற்றுமாசு அதிகரித்து சுற்றுச்சூழலை பாதித்தது. தற்போது கோடை காலம் என்பதால் குப்பை கிடங்குகளில் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளதால் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சிகள் எடுக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

எனினும், இதில் மெத்தனம் காட்டப்பட்டுள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கண்டித்துள்ளார். அதோடு, அலட்சியமாக இருந்த கிழக்கு மாநகராட்சியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுபற்றி ராய் மேலும் கூறியதாவது: காஜிப்பூர் குப்பை கிடங்கின் ஒருபகுதி ஞாயிறன்று தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு அமைப்பின்(டிபிசிசி) குழு ஒன்று கிழக்கு மாநகராட்சி நிர்வகித்து வரும் காஜிப்பூர் குப்பை கிடங்கு இடத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், குப்பை கிடங்கு இடத்தில் இதுபோன்ற தீவிபத்து சம்பவங்களைத் தடுக்கத் தேவையான எந்த ஏற்பாட்டையும் மாநகராட்சி செய்யவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தீ விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த கிழக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதோடு, கோடையினால் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக தீ விபத்து ஏற்படக்கூடிய அனைத்து தளங்களையும் கண்காணிக்குமாறு டிபிசிசி பல்வேறு நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. வட மாநிலங்களில் மாசு அளவைக் குறைப்பதற்கான செயல் திட்டங்களை மத்திய அரசு உருவாக்க முன்வர வேண்டும். டெல்லி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நகரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு குறைந்துவிட்டதாக ஐக்யுஏர் மற்றும் அறிவியல் மற்றும்  சுற்றுச்சூழல் மையம் ஆகிய இரண்டு அமைப்புகள் தங்கள் அறிக்கைகளில் ஒப்புக் கொண்டுள்ளன. ஐக்யுஏர் தரவுகளின்படி, மாசு அளவு பிஎம் 2.5 அளவை 15 சதவிகிதம் குறைப்பதில் டெல்லி வெற்றி பெற்றுள்ளது. 2014-15 ஆம் ஆண்டு முதல்  டெல்லியில் பிஎம் 2.5 அளவு 25 சதவீதம் குறைந்துள்ளதாக சிஎஸ்இ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐக்யுஏர் என்பது சுவிஸ் குழுவாகும். இது பிஎம்2.5 எனப்படும் நுரையீரல்-சேதப்படுத்தும் நுண்ணிய துகள்களின் செறிவின் அடிப்படையில் காற்றின் தர அளவை அளவிடுகிறது. மேலும், தெர்மல்பவர் மின் நிலையங்களை மூடிய முதல் மாநிலம் டெல்லி மட்டுமே. நாங்கள் மாசு வெப்பநிலைகளை அடையாளம் கண்டு குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அனைத்து தொழில்துறை பிரிவுகளும் இப்போது குழாய் பதிக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்குகின்றன. மின்சார வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமும் டெல்லி தான். ஆனால், அண்டை நகரங்களான குர்கான், நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத், பிவாடி பகுதிகளில் உருவாக்கப்படும் புகைமாசுவால் டெல்லியை பாதிப்படைய செய்கிறது. எனவே, வட மாநிலங்களில் மாசு அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென் என மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஐக்யுஏர் மற்றும் சிஎஸ்ஆர் தரவுகளை ஆய்வு யெ்து அவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.. இவ்வாறு ராய் தெரிவித்தார்.

Related Stories: