மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் லாரிகள் மோதி வீட்டின் மீது விழுந்து தம்பதி உள்பட 6 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி வீட்டின் மீது விழுந்ததில் தம்பதி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை, கல்லார் அருகேயுள்ள தூரி பாலம் பகுதியில் சாந்தாமணி என்பவரது வீடு உள்ளது. நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று டயர் வெடித்ததால், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த வேகத்தில் 2 லாரிகளும், சாலையின் ஓரத்தில் இருந்த சாந்தாமணி என்பவரது வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சாந்தாமணி, அவரது பேரன் ரஞ்சித்குமார் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த லாரியில் பயணம் செய்த கூடலூர் சேரம்பாடியை சேர்ந்த செல்வராஜ் (52), அவரது மனைவி விஜயலட்சுமி (45), இவர்களது மகன் கார்த்திக் (28), மகள் கவிதா (19) உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் 2 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: