ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி!: தடுப்பூசி போட்டும் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான  ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 83 வயதான ஃபரூக் அப்துல்லாவுக்கு லேசான அறிகுறி தெரியவந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவலை ஃபரூக் அப்துல்லாவின் மகனும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் ( மார்ச் 2) ஃபரூக் அப்துல்லா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டோஸ் இன்னும் எடுக்காத நிலையில் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனிடையே தாமும் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். அத்துடன் தந்தையுடன் தொடர்புடைய அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் அடுத்த தடுப்பூசியைப் பெறும் வரையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

Related Stories: