குப்பைக்கு தீ வைத்ததால் சாலையை மூடிய கரும்புகை அரசு பஸ்கள் மோதி 5 பேர் பலி: ஆந்திராவில் கோர விபத்து

திருமலை: ஆந்திராவில் குப்பைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததால் கரும்புகை சாலையை மூடியது. இதனால் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், அருகே நேற்று முன்தினம் அதிகாலை சாலையில் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஒரு பயங்கர விபத்து ஆந்திராவில் நடந்தது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயநகரம் நோக்கி நேற்று காலை 8.30 மணியளவில் அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. விஜயநகரம் மண்டலம், சுங்கரி பேட்டா அருகே வந்தபோது சாலையோரம் இருந்த குப்பையில் மர்மநபர்கள் வைத்த தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த தீயில் இருந்து கரும்புகை எழுந்தது.

இதனால், சாலை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால், சாலை சரியாக தெரியாமல் அரசு பஸ் டிரைவர் திணறினார். அப்போது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக, அரசு பஸ் டிரைவர் பஸ்சை திருப்ப முயற்சித்தார். இதில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், எதிரே பாலகொள்ளுவிலிருந்து விஜயநகரம் நோக்கி வந்த அரசு பஸ்சுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பஸ்கள் சுக்கு நூறாக நொறுங்கி 2 டிரைவர்கள், பஸ்களில் வந்த பயணிகள் 3 பேர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

2 பஸ்களிலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விஜயநகரம் எஸ்பி ராஜகுமாரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: