விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்:

விருதுநகர்: விருதுநர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்மாவட்டங்களில் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் நிறுத்தி வைக்கப்பட்ட பங்குனி திருவிழா, நடப்பு ஆண்டில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பங்குனி திருவிழாவிற்கு மார்ச் 14ல் சாட்டுதல் அறிவிப்பு செய்யப்பட்டது. நேற்றிரவு 8 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் ‘ஆகோ’, ‘அய்யாகோ’ கோஷம் எழுப்பி அம்மனை தரிசித்தனர்.

நேர்த்திக்கடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் கையில் மஞ்சள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். அம்மனை குளிர்விக்கும் வகையில் கோயில் கொடிமரத்திற்கு நேர்த்திக்கடனாக அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை நூற்றுக்காணக்கான பெண்கள் தினமும் தண்ணீர் உற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஏப்.4 பொங்கல் திருவிழா, ஏப்.5 அக்கினிச்சட்டி மற்றும் கயிறு குத்து, ஏப்.6 தேரோட்டம் நடைபெற உள்ளது. பங்குனி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று நகர் மற்றும் சுற்றுக்கிராம பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

2 நாள் மட்டுமே அனுமதி

கொரோனா தொற்று பரவலால் அக்னிசட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஏப்.4 அதிகாலை முதல் ஏப்.5 இரவு 10 மணி வரை செலுத்த அனுமதிக்கப்படுவர். அக்னிச்சட்டி ஏந்தி வரும் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டுமென கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Related Stories: