போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி தியாகதுருகத்தில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம்-கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

கள்ளக்குறிச்சி : தியாகதுருகத்தில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தியாகதுருகம் பேரூராட்சி பகுதி மற்றும் தியாகதுருகத்தை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக தினமும் தியாகதுருகத்திற்கு வந்து செல்கின்றனர்.

அங்கு சேலம்- சென்னை மெயின் ரோடு பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை ஏற்கனவே குறுகலாகவே உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பல்வேறு கடை வியாபாரிகள் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் மற்றும் தற்காலிகமாக கடைவைத்து வியாபாரம் செய்ய கூடியவர்கள் ஆகியோர் சாலையின் இரண்டு பக்கங்களிலும் தார் சாலையை ஒட்டி ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் ஒதுங்கி செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அதிக சுமைகளை ஏற்றி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து தியாகதுருகம் பேருந்து நிறுத்தம் பகுதியில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்றவும், ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றவும், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு சக்கர வாகனங்களை முறையாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் கடை வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையின் ஓரமாக இருசக்கர வாகன நிறுத்தப்படுவதை தடுக்கவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: